மௌலானா மௌலவி V.U.A. யூசுப் அன்சாரி ஹழ்ரத் (ரஹ்)
(05.03-1931 – 26.02.1994)
மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள கடையநல்லூர் பெரிய தெருவில் வசித்து வந்த வெ.கா.அ. அசன் பிள்ளை சாஹிப், பீவி பாத்திமாள் தம்பதியருக்கு மூன்றாவதாக 05.03-1931 அன்று பிறந்தார்கள். ஹழ்ரத் அவர்கள் சிறு வயது முதலே நல்ல ஒழுக்கத்துடனும் புத்தி கூர்மையுடனும் வளர்வதைக் கண்ட தாய், இவர் எதிர் காலத்தில் பிறருக்காக பாடுபடும் சமூக சேவகனாக திகழ வேண்டும் என்ற எண்ணத்தில் ஊரின் சிறந்த மார்க்க மேதையான கலீபா மன்னான் ஹழ்ர்த்திடம் குர்ஆன் ஓதுவதற்கு ஒப்படைத்தார்கள்.
உள்ளூரில் குர்ஆனை ஓதிக் கொண்டே 5 ம் வகுப்பு கல்வி பயின்ற போது 1948ல் தமது 16-வது வயதில் நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா மதரஸாவில் முதல் ஜும்ராவில் சேர்ந்து தனது மார்க்க கல்வியைத் தொடங்கி 1955 –ல் ஆலிம் பட்டம் வாங்கினார்கள். பின்பு மறு ஆண்டே அதே மதரஸாவில் ஆசிரியராக பணியைத் துவங்கி தமிழகத்தின் பல்வேறு மதராஸாக்களில் ஆசிரியராக பணி செய்தார்கள். நீடூர் மதரஸாவில் ஒரு ஆண்டும், பொதக்குடி மதரஸாவில் 1960 to 1962 வரையிலும், ஈரோடு தாவூதிய்யா மதரஸாவில் 1963 to 1965 வரையிலும் கூத்தாநல்லூர் சங்கரன்பந்தல் போன்ற ஊர்களில் சில ஆண்டுகளும் பணி செய்து கடைசியில் பேட்டை ரியாளுல் ஜினான் மதரஸாவில் 1970 to 1974 வரை முதல்வர் பொறுப்பிலும் பணி செய்து பல நூறு ஆலிம்களை உருவாக்கினார்கள்.
இறுதியில் தனது சொந்த ஊரான கடையநல்லூரில் தனது சொந்த இடத்தில் ஒரு கட்டிடத்தில் 25.10.1976அன்று பைஜுல் அன்வார் என்ற பெயரில் துவங்கினார்கள். பல்வேறு ஊர்களுக்கும் சென்று பயான் செய்தார்கள். இறுதியில் சென்னை அங்கப்ப நாயக்கன் தெருவில் உள்ள மஸ்ஜிதே மாமூர் பள்ளிவாசலில் சிறப்பான பயான் செய்தார்கள். 24.02.1994 அன்று ரமளான் பிறை 14 ல் இப்தார் முடித்த பின் உடல் சோர்வாக உள்ளதே என ஓய்வெடுத்த போது படபடப்பும் சோர்வும் வேர்வையும் ஏற்ப்பட அருகில் இருந்த மருத்துவ மனையில் சேர்த்தார்கள். அங்கு சிகிச்சை பலனின்றி அதிகாலை மணியளவில் 2.30 வபாத்தானார்கள்.
அவர்களால் உருவாக்கப்பட்ட அம்மதரஸா இன்று பெரிய கல்லூரியாக வளர்ந்து ஓராயிரம் ஆலிம்கள் வரை உருவாக்கி இந்த சமூகத்திற்கு சேவையாற்ற அனுப்பி உள்ளது......