பைஜுல் அன்வார் அரபிக் கல்லூரி 25/10/1976 அன்று மர்ஹூம் மௌலானா மௌலவி அல்ஹாஜ் கன்ஜுல் உலூம் அல்லாமா V.U.A. யூசுப் அன்ஸாரி ஹழ்ரத் அவர்களால் துவங்கப்பட்ட நமது கல்லூரி கடந்த 40 ஆண்டுகளாக இறைவன் அருளால் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அல்ஹம்துலில்லாஹ். ஆரம்பத்தில் 15 மாணவர்களையும் 2 உஸ்தாதுமார்களைக் கொண்டும் துவங்கப்பட்டது. அடுத்த ஆண்டே இது வளர்ச்சியடைந்து பட்டம் வழங்கும் நிலைக்கு உயர்ந்து ஏழு ஆலிம்களும் ஒரு ஹாபிழும் பட்டம் பெற்றனர்.
மர்ஹூம் மௌலானா மௌலவி அல்ஹாஜ் கன்ஜுல் உலூம் அல்லாமா V.U.A. யூசுப் அன்ஸாரி ஹழ்ரத் அவர்கள் தனக்கு நெருக்கமான தனவந்தவர்களை அணுகி, கல்லூரியைப் பற்றி எடுத்துக் கூறி ஒவ்வொருவரும் ஒரு கட்டிடம் கட்டிக் கொடுக்க செய்தார்கள். இம்முறையில் இக்கல்லூரி இறைவன் அருளால் சிறிது சிறிதாக வளர்ச்சியடைந்து எவரும் எதிர்பாராத அளவுக்கு குறுகிய காலத்திலேயே மாபெரும் வளர்ச்சி கண்டது. மாணவர்கள் தங்கிப் படிக்கும் அளவுக்கு போதுமான கட்டிட வசதிகள், பள்ளிவாசல், வகுப்பறைகள், நூலகம் போன்ற அனைத்து அம்சங்களும் அமையப் பெற்று விட்டன. கடையநல்லூரில் உள்ள ஈகைமிக்க கனவான்கள் அத்தனை மாணவர்களுக்கும், உஸ்தாதுமார்களுக்கும் அனுதினமும் இருவேளையும் உணவு வழங்கி, இக்கல்லூரிக்கு உயிரூட்டி வருகிறார்கள். இங்கு ஓதி முடித்து பட்டம் பெறும் மாணவர்களுக்கு "பைஜி" என்னும் பட்டம் வழங்கப்படுகிறது.
இதுவரை இக்கல்லூரியில் 700-க்கும் மேற்ப்பட்ட ஆலிம்களும், நூற்றுக்கும் மேற்ப்பட்ட ஹாபிழ்களும் பட்டம் பெற்று இந்திய திருநாட்டின் பல ஊர்களிலும், உலகின் பல நாடுகளிலும் மார்க்க சேவையாற்றி வருகின்றார்கள். இக்கல்லூரியில் நிஜாமிய்யா பாடத்திட்டத்தின் அடிப்படையில் தான் பாடங்கள் நடப்படுகின்றன. ஆலிம் 7 ஆண்டு பாடத்திட்டம் ஆகும்.
மாணவர்கள் தங்களது பேச்சுத்திறனை வளர்த்துக் கொள்வதற்காக வாரந்தோறும் வியாழக்கிழமை மதியம் பேச்சுப் பயிற்சி கொடுக்கப்படுகிறது. எப்போதும் மாணவர்களுக்கு ஆன்மீக உணர்வு இருக்கவேண்டும் என்ற மேலான எண்ணத்தில் தினந்தோறும் மக்ரிப் தொழுகைக்குப் பின் ஸலவாத்தும், வாரந்தோறும் வியாழக்கிழமை மக்ரிபுக்குப் பின் ஹல்கா திக்ரு மஜ்லிஸும், புர்தாவும், ஞாயிற்றுக்கிழமை இஷா தொழுகைக்குப் பின் ஹத்தாதிய்யா மஜ்லிஸும் நடத்தப்படுகிறது. கம்யூட்டர் பயிற்சியும் கொடுக்கப்படுகிறது.
மேலும் உலகக் கல்வியிலும் தேர்ச்சி பெறவேண்டும் என்பதற்காக பாடத்திற்கு இடையூறு இல்லாத வகையில் 8,10,12-ம் வகுப்பிற்கான பயிற்சியும், B.A, மற்றும் அப்ஸலுல் உலமா படிப்புக்கான பயிற்சியும் அதற்குரித்தான ஆசிரியர்களைக் கொண்டு கொடுக்கப்படுகிறது. மாணவர்களின் கல்வித்திறனில் அக்கறை கொண்டு நம் கல்லூரி உஸ்தாதுமார்களும் முழு மூச்சாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இங்கு பயின்ற, பயிலுகின்ற மாணவர்கள் தமிழகம் தழுவிய பல போட்டிகளில் கலந்து கொண்டு முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகளை வென்று நம் கல்லூரிக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு இக்கல்லூரியில் கற்றுக் கொடுக்கின்ற உஸ்தாதுமார்கள், மாணவர்கள் இக்கல்லூரிக்கு பல வகையிலும் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் கண் குளிரக் கண்டு இக்கல்லூரியை நிர்வகித்து வரும் நிர்வாகிகளும், பேருதவிகள் புரிந்து வருகின்ற தனவான்களும், ஆனந்தமடைகின்றார்கள். எல்லாவற்றிர்க்கும் மேலாக தூய உள்ளத்தோடு இக்கல்லூரியை நிறுவிய அவர்களின் ஆன்மாவும் ஒளி பெற்று பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.
எல்லாம் வல்ல அல்லாஹ் இக்கல்லூரி சிறப்பாக நடைபெற எல்லா வகையிலும் பேருதவிகள் புரிந்து வருகின்ற தனவான்களுக்கும், நிர்வாகிகளுக்கும், கல்வி போதிக்கின்ற உஸ்தாதுமார்களுக்கும், கல்வி கற்றுக் கொள்கின்ற மாணவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நீண்ட ஆயுளையும், இம்மை-மறுமையின் அனைத்து பேறுகளையும் அளவில்லாமல் வழங்ககுவானாக. ஆமீன்!. குறிப்பாக இக்கலூரியின் நிறுவனர் மர்ஹூம் மௌலானா மௌலவி அல்ஹாஜ் கன்ஜுல் உலூம் அல்லாமா V.U.A. யூசுப் அன்ஸாரி ஹழ்ரத் அவர்களின் பாவங்களை மன்னித்து அன்னாரின் மண்ணறையை சுவனப் பூஞ்சோலையாக்கி, ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் உயர்ந்த சுவனத்தை அன்னாருக்கு அல்லாஹ் வழங்குவானாக! ஆமீன்!.
நம் கல்லூரிக்கு பேருதவி புரிய விரும்புபவர்கள் செக்காகவோ, டிராப்டாகவோ கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு மிகவும் தயவாய் வேண்டுகிறோம்.
PRINCIPAL,
FAIZUL ANWAR ARABIC COLLEGE,
ANSARI HAZRATH NAGAR,
KADAYANALLUR – 627751.
TIRUNELVELI DT,
PHONE – 04633-240270, 243109.
EMAIL : faizulanwar1976@gmail.com